நல்லெண்ண பயணமாக கொரிய கடற்படை கப்பல்கள் சென்னை வருகை


நல்லெண்ண பயணமாக கொரிய கடற்படை கப்பல்கள் சென்னை வருகை
x

நட்பை வலுப்படுத்தும் நல்லெண்ண பயணமாக கொரியாவின் 2 கடற்படை கப்பல்கள் நேற்று சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தன. அவற்றில் 470 வீரர்களும் வந்தனர்.

சென்னை,

இந்தியாவுடன் நட்பை மேம்படுத்தும் வகையில் தென் கொரியாவின் ஆர்.ஒ.கே.எஸ். ஹன்சாண்டோ மற்றும் ஆர்.ஒ.கே.எஸ். டேச்சியோங் ஆகிய இரு கடற்படை கப்பல்கள் நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்தன. மேலும் ரியர் அட்மிரல் காங் தலைமையில் 470 கடற்படை வீரர்களும் வந்து சேர்ந்தனர்.

இந்த கப்பல்கள் மற்றும் கொரிய கடற்படை வீரர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் ரியர் அட்மிரல் காங், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

110 நாட்கள் பயணம்

தென் கொரிய கடற்படை கப்பல்கள் 110 நாட்கள் நீண்ட பயணத்தை கடந்த 2-ந்தேதி தொடங்கி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள வியட்நாம், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி உள்ளிட்ட 9 நாடுகளில் உள்ள 10 துறைமுகங்களுக்கு செல்ல திட்டமிட்டு சென்னைக்கு வருகை தந்துள்ளோம். அத்துடன் அமெரிக்காவுக்கும் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் வருகை தந்துள்ள வீரர்கள் கொரியா கடற்படை அகடாமியை சேர்ந்தவர்கள். இந்த பயணம் நாடுகளுடனான நல் உறவுகளை வலுப்படுத்தவும் பரஸ்பரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று நினைக்கிறோம்.

கடந்த 1975-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்தியாவுக்கு வருவது இது 16-வது முறையாகும். முன்னதாக கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் இந்தியாவிற்கு வருகை தந்தோம். தற்போது 'டோங்-கூ கொரியா' 4-வது ஆண்டுக்கான கடற்படை வீரர்களுக்கான பயிற்சி திட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் தூய்மைப்பணிகள்

அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த கப்பல்களில் வந்துள்ள கொரியா கடற்படை வீரர்கள் வருகிற 1-ந்தேதி வரை சென்னையில் தங்கி இருப்பார்கள். நாளை (இன்று) சென்னையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக சென்னையில் வசிக்கும் கொரியா நாட்டு மக்களுடன் இணைந்து மெரினா கடற்கரையை சுத்தம் செய்வதுடன், விழிப்புணர்வு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர். தொடர்ந்து இந்திய கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்த இருக்கிறோம்.

நிகழ்ச்சிகளில் உள்ளூர் இந்திய பங்கேற்பாளர்களுடன் கொரிய கடற்படை வீரர்கள் பிராஸ் இசைக்குழு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அத்துடன், இந்திய பார்வையாளர்களுக்கு கொரிய கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்தி காண்பிக்கின்றனர். இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story