கோரிப்பாளையம் மேம்பால பணிகள் விரைவில் தொடங்கப்படும்-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி


கோரிப்பாளையம் மேம்பால பணிகள் விரைவில் தொடங்கப்படும்-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
x

கோரிப்பாளையம் மேம்பால பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மதுரை

மதுரை,

மதுரை கலைஞர் நினைவு நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்த பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை நகரில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் கோரிப்பாளையம், மேலமடை (அப்போலோ சந்திப்பு) ஆகிய பகுதிகளில் 2 மேம்பாலங்கள் அமைப்பதற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதனை இறுதி செய்த பின்பு விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். மெட்ரோ ரெயில் திட்டத்தினால் கோரிப்பாளையம் மேம்பாலம் அமைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல, நெல்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை உள்ள 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைப்பதற்கும் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த மேம்பாலத்தால் நெல்பேட்டைப் பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது வியாபாரத் தலங்கள் அகற்றப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மனு அளித்தார்கள்.

இது தொடர்பாக நான் நேரடியாக ஆய்வு செய்ததின் அடிப்படையில் நெல்பேட்டைப் பகுதியில் பாலம் கட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதாவது 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரே நீளமாக பாலம் அமைப்பதற்கு பதில் ஆங்காங்கே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அமைச்சர் வேலு, மூர்த்தி ஆகியோர் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள பழைய கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு முழு உருவ சிலை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story