விளையாட்டு விடுதி மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை


விளையாட்டு விடுதி மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை
x

விளையாட்டு விடுதி மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

பெரம்பலூர்

பாலியல் தொல்லை

பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி, மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் தற்காப்பு பயிற்சியில் (டேக்வாண்டோ) ஈடுபட்டு வரும் மாணவிகள் சிலரிடம், தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் மது போதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவித்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடைத்த அலுவலர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கோபிநாத் கடந்த 7-ந்தேதி இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

பணியில் இருந்து நீக்கம்

ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து அவர்களை விரைந்து கைது செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் நேற்று முன்தினம் மனு அளித்தனர். இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் அரியலூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் விளையாட்டு விடுதி மாணவிகள் அளித்த புகாரின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார். மேலும் தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜனும் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

விசாரணை

மேலும் தலைமறைவாக உள்ள தர்மராஜனையும், சுரேஷ்குமாரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதையடுத்து அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக இருந்த லெனின் தற்போது பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக பொறுப்பேற்று கொண்டு, அரியலூர் மாவட்டத்தையும் கூடுதலாக கவனித்து வருகிறார். தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளராக பரணிதேவி புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த புகார் தொடர்பாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி நேற்று வருவாய்த்துறையினர், போலீசாருடன் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கும், அரசு மகளிர் விளையாட்டு விடுதிக்கும் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு அவர்கள் விசாரணை அறிக்கையை கலெக்டரிடம் சமர்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதி, மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story