கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நீலகிரி

கோத்தகிரி: கோத்தகிரி பஸ் நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் திருவிழாக்கான கொடியேற்றம் நடைபெற்றது. கோத்தகிரி ஆலய பங்கு தந்தை அமிர்தராஜ் மற்றும் எமரால்டு ஆலய பங்குத்தந்தை ஞானதாஸ் ஆகியோர் தலைமையேற்று கொடியேற்றி வைத்தனர். இதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் திருப்பலிகள் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நாளான 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி மற்றும் 7 மணிக்கு தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலியும், 8 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அருட்தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை வீற்றிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். தொடர்ந்து தேவ நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு புனித ஆரோக்கிய மாதா ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.


Next Story