கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையாக திகழ்கிறது


கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையாக திகழ்கிறது
x

தமிழகத்தில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையாக திகழ்கிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழகத்தில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையாக திகழ்கிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

ஆயுர்வேத தின நிகழ்ச்சி

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் தேசிய ஆயுர்வேத தின நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு, மாணவ- மாணவிகளிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

தேசிய ஆயுர்வேத தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழகத்திலேயே கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையாக திகழ்வதோடு, மிகவும் தூய்மையாக, வரக்கூடிய பொதுமக்களுக்கு அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளித்து பூரண குணமடைய செய்வதும் பெருமைக்குரியது. ஆயுர்வேத, சித்த, யுனானி மற்றும் ஓமியோபதி மருந்துகளால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படும் மருந்து எதிர்வினையை கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள பெரிபெரல் பார்மாகோவிஜிலென்ஸ் மையத்தில் தெரிவிக்கலாம்.

முன்வர வேண்டும்

ஆயுர்வேத, சித்த, யுனானி மற்றும் ஓமியோபதி மருந்துகள் அளிக்கும் பயன்கள் என்று பொதுமக்களை தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு விழிப்பாக இருக்க வேண்டும். இத்தகைய விளம்பரங்கள் மிகைப்படுத்தப்பட்டதாகவோ, தவறானதாகவோ, சட்ட பூர்வமற்றதாகவும் இருக்கலாம். இத்தகைய தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் குறித்து புகாரளிக்க கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஆயுர்வேத, சித்த, யுனானி மற்றும் ஓமியோபதி மருந்துகளை பதிவு செய்யப்பட்ட தகுதியான ஆயுஷ் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும் அவர்தம் மேற்பார்வையின் கீழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லந்தோறும் தினம் தினம் ஆயுர்வேதம் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டாக்டர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் பேசினார். பின்னர் அவர் ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சிகளில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் கிளாரன்ஸ் டேவி, கோட்டார் அரசு ஆயுர்வேத டாக்டர்கள் ராஜ், பானு ரமேதா, நந்தினி விஜய், ஸ்ரீலதா, சுரேஷ், ராஜபாண்டி, சைஜூ ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story