யோக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஏ. எஸ்.ஆர்.நகரில் யோக விநாயகர் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கப்பட்டு முதல்கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 5 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, 6.30 மணிக்கு யோக விநாயக பெருமான் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யோக விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல் என்கிற ஏ.எஸ்.ராமலிங்கம் மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.