ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா


ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடந்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடந்தது.

தேரோட்டம்

கோபி பவள மலை முத்துக்குமாரசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 2-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. 3-ந் தேதி விநாயகர் பூஜையும், கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் பால், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் காலை 9 மணி அளவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரானது மலையைச் சுற்றிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோபி பச்சைமலை

இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் சண்முகசுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிவப்பு சாற்றி அலங்காரம் நடைபெற உள்ளது. மேலும் கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலிலும் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மலை அடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வு செய்தார்.

மேலும் கோபி கடைவீதி சுப்பிரமணிய சாமி கோவில், மூல வாய்க்கால் சுப்ரமணியசாமி கோவில் மற்றும் கோபி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடைபெற்றது.

அந்தியூர்

இதேபோல் அந்தியூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் மற்றும் காவடி எடுத்துக் கொண்டு மேளதாளங்கள் முழங்க அந்தியூர் தேர் வீதியில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

அதைத்தொடர்ந்து சாமிக்கு பால் மற்றும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுப்பிரமணிய சாமியை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அந்தியூர் முத்துக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு வாண வேடிக்கையுடன் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது

பெருந்துறை

பெருந்துறையைச் சேர்ந்த முருக பக்தர்கள் நேற்று பால், பன்னீர் குடங்களுடன், காவடியையும் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு ஊர்வமாக சென்றார்கள். பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் பவானி ரோடு, நால் ரோடு சந்திப்பு, கோவை மெயின் ரோடு, பஸ் நிலைய சந்திப்பு வழியாக பெருந்துறை சோளீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அந்த கோவிலில் உள்ள வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணிய சாமி சன்னதியில் பால், பன்னீரால் முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகிரி

சிவகிரி வேலாயுத சாமி கோவிலில் சாமிக்கு பால், தயிரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்து கொமாரபாளையத்தில் தவளகிரி முருகன் கோவில் உள்ளது. இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை முதலே தவளகிரி முருகனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவையொட்டி சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஆடியபடி கோவிலுக்கு வந்தார்கள். கோவிலில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் முருகனை வணங்கினார்கள். மேலும் நேற்று மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பவானி

தைப்பூசத்தை முன்னிட்டு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள முருக பெருமான் உடனமர் வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

இதேபோல் பவானி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவிலிலும், பவானி வர்ணபுரம் 5-வது வீதி பகுதியில் உள்ள பால தண்டாயுதபாணி சாமி கோவிலும், பவானி லட்சுமி நகர் அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவிலிலும் திருக்கல்யாண உற்சவமும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை சாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனியாண்டவர் கோவில்

பவானியில் உள்ள பழனியாண்டவர் கோவில் சார்பில் முருகப்பெருமான் உடனமர் வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு நேற்று அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்திகள் சிலை தேரில் வைக்கப்பட்டு அருள்பாலித்தனர். அப்போது அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தேர் பவானி சங்கமேஸ்வரர் கோவில் மைதானத்தில் இருந்து பூக்கடை வீதி, வி.என்.சி கார்னர், தேர் வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் பவானியில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாசூர்

ஊஞ்சலூர் அருகே உள்ள பாசூர் காந்த மலை முருகன் கோவிலில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி பாசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் முருகனை வணங்கி சென்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வரர் கோவில்களிலும் தைப்பூசத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள மலையபாளையம் உதயகிரி முத்து வேலாயுத சாமி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வந்தது. நேற்று தைப்பூசத்தன்று காலை 7 மணி அளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அதைத்தொடர்ந்து சுற்றியுள்ள அனைத்து ஊர் பொதுமக்களும் காவடி மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்து உதயகிரி முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் உதயகிரி முத்து வேலாயுதசாமி ஆலய அருட்பணி மன்றம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. வருகிற 11-ந் தேதி அன்று மகா தரிசனம் நடைபெறும்.

திட்டமலை

நம்பியூர் அருகே உள்ள திட்ட மலை குழந்தை குமாரசாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அதைத்தொடர்ந்து சுற்றியுள்ள அனைத்து ஊர் பொதுமக்களும் காவடி மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்து குழந்தை குமாரசாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் குழந்தை குமாரசாமி ஆலய அருட்பணி மன்றம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையம் பொன்மலை ஆண்டவர் கோவில் தைப்பூச தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கிராமசாந்தி பூஜையுடன் தொடங்கியது. 3-ந் தேதி பகல் 11 மணி அளவில் யாகபூஜையும், கொடியேற்றமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் தேருக்கு மகுடம் ஏற்றுதல் நடந்தது. இரவு 8 மணிக்கு பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்துக்கொண்டு வந்து பொன்மலை ஆண்டவரை வழிப்பட்டனர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு உற்சவ மூர்த்திகள் தேர் நிலையை அடைதல் நடைபெற்றது. பின்னர் மதியம் 2 மணி அளவில் பக்தர்கள் விநாயகர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதன்பின்னர் மாலை 5 மணி அளவில் முருகர் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இரவு உற்சவ மூர்த்திகள் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. தேர் திருவிழாவில் கொண்டையம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பொன்மலை ஆண்டவரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story