அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா; ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்


அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குண்டம் திருவிழா

அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் குண்டம் மற்றும் தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து எருமை கிடா பலி கொடுத்தல், கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. தினமும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.

பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த கரும்புகளை (விறகு) கொண்டு 60 அடி நீளத்துக்கு குண்டம் தயார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலை முக்கிய நிகழ்வான குண்டம் விழா தொடங்கியது. இதையொட்டி பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும், அம்மனிடம் வாக்கு கேட்டல் நிகழ்வும் நடைபெற்றது.

தீ மிதித்தனர்

அம்மன் வாக்கு கொடுத்ததும் தலைமை பூசாரி முதலில் குண்டத்தில் இறங்கி தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து கையில் பூ சுற்றிக்கொண்டும், மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டும் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். "அம்மா, தாயே எங்களை காப்பாற்று" என பக்தி கோஷம் எழுப்பினர். ஒரு சிலர் தங்களது கைக்குழந்கைளுடனும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

அப்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கூடியிருந்த பக்தர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

அலகு குத்தி வந்தனர்

இது தவிர பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். மேலும், பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் பர்கூர், அந்தியூர், வெள்ளித்திருப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவிழாவில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பாதுகாப்பு கருதி மருத்துவ குழுவினர், தீயணைப்பு படை வீரர்கள் வாகனங்களுடன் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். குண்டம் விழாவை தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து 3 நாட்கள் தினமும் மாலை நேரங்களில் வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்வார்கள். 10-ந் தேதி அன்று தேர் நிலை நிறுத்தப்படும்.


Next Story