சிவகிரி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்


சிவகிரி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x

சிவகிரி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பணிகள்

சிவகிரியில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் புதிதாக நுழைவுவாயில், ராஜகோபுர முகப்பு மண்டபம் கட்டப்பட்டு, அஷ்டலட்சுமிகள், வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியர், உள்ளிட்ட சாமி சிலைகள் புதிதாக நிறுவப்பட்டு திருப்பணிகள் நடந்தன.

பின்னர் சிற்ப சாஸ்திர முறைப்படி வர்ணங்கள் தீட்டி, ஆதிவிநாயகர், மதுரைவீரன், கருப்பண்ணசாமி, கன்னிமார்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புதிய சன்னதிகள் அமைக்கப்பட்டன.

கும்பாபிஷேகம்

இதைத்தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த 3-ந் தேதி கோவில் முன்பு 26 யாககுண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து முளைப்பாரி மற்றும் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக யாகசாலையை வந்தடைந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 6 கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை பூர்ணாகுதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் புனித கும்ப கலசங்கள் கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "ஓம்சக்தி, பராசக்தி" என்று பக்தி கோஷமிட்டனர்.

பக்தர்கள் தரிசனம்

பின்னர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ராமலிங்கம், அறங்காவலர்கள் குழு தலைவர் குமரவேல், செயலாளர் சர்வலிங்கம், அறங்காவலர் பத்மநாபன் மற்றும் திருப்பணிக்குழு பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story