உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
உடுமலையை அடுத்த மலையாண்டிபட்டினத்தில் உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் புனரமைப்புபணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதன பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவேற்ற நிலையில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.பின்னர் இரவு 8 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், வேதிகார்சனையுடன் முதல் காலயாகம் பூர்த்தி அடைந்தது. அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு நவரத்தின பஞ்சலோக பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாட்டுதல், கலச ஸ்தாபிதம், தீபாராதனை நடைபெற்றது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 5 மணிக்கு 2-ம் கால யாக பூஜை தொடங்கியது.
பின்னர் பாவனாபிஷேகம், சூரியபூஜை, துவாரகபூஜை, வேதிகார்ச்சனை கடம் புறப்பாடு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து காலை உச்சிமாகாளியம்மன் விமான ஸ்தாபனம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேகம் தசதரிசனம், தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. இதையடுத்து மதியம் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த விழாவில் மலையாண்டிபட்டினம், குரல் குட்டை, கண்ணமநாயக்கனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.