வீரராகவப்பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜை
மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், நல்ல நினைவாற்றலுடனும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று காலை லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜை நடந்தது. திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த யாக பூஜையில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். சங்கல்பம், விஷ்வக்சேனர் பூஜை, வாசுதேவ புண்யாகவாசனம் ஆகியவற்றுடன் ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை நடந்தது. மாணவ-மாணவிகள் ஹயக்ரீவர் மந்திரத்தை பாராயணம் செய்தனர்.
பூஜையில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளின் பெயர், நட்சத்திரம் உச்சரிக்கப்பட்டு யாக பூஜை நடந்தது. இதைதொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் இனி வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த யாக பூஜைகள் நடக்கிறது. பிளஸ்-2 வகுப்பிற்கு அடுத்த மாதம் 5-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்பிற்கு அடுத்த மாதம் 12-ந்தேதி, 10-ம் வகுப்பிற்கு அடுத்த மாதம் 19, 26 ஆகிய தேதிகளில் இந்த பூஜை நடக்க உள்ளது. இதற்கு எந்தவித கட்டணமும் இல்லை என அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.