கோவில்பட்டி,கீழஈராலில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
கோவில்பட்டி,கீழஈராலில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி மற்றும் கீழஈராலில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
மாரத்தான்
கோவில்பட்டியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. எட்டயபுரம் மெயின் ரோட்டில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை உதவி கலெக்டர் ஜோன் கிறிஸ்டிபாய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அங்கிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் கால்நடை மருத்துவமனை சந்திப்பு வழியாக திட்டங்குளம் மொத்த மற்றும் சில்லறை காய்கறி மார்க்கெட் வரை சென்று மீண்டும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் தாசில்தார் லெனின், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், கிழக்கு போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
கீழஈரால்
இதேபோன்று, எட்டயபுரம் அருகேயுள்ள கீழஈராலில் அரசு சார்பில் தகவல் அறியம் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இந்த ஓட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தலைமை தாங்கினார். தாசில்தார் மல்லிகா மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொன் போஸ்கோ கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் பிரபு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஓட்டம் கீழஈராலில் இருந்து வாலம்பட்டி வரை 5 கி.மீ. தொலைவுக்கு நடந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஓடினர். இந்த ஓட்டத்தில் தொன் போஸ்கோ கல்லூரி மாணவர் அஜித் குமார் முதலிடமும், ஆக்சீலியம் பள்ளி மாணவர் தமிழரசன் இரண்டாமிடமும், ராஜா மேல்நிலை பள்ளி மாணவர் அபிஷேக் மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.