கோவில்பட்டி தற்காலிக சந்தையில் காய்கறி கடை வியாபாரிகள் மீது தாக்குதல்; 6 பேர் கைது


கோவில்பட்டி தற்காலிக சந்தையில் காய்கறி கடை வியாபாரிகள் மீது தாக்குதல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி தற்காலிக சந்தையில் காய்கறி கடை வியாபாரிகளை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியிலுள்ள தற்காலிக சந்தையில் உடைந்த தக்காளிகளை கொடுக்க மறுத்த வியாபாரிகளை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வியாபாரிகள்

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகர் பல்லக்கு ரோட்டை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மகன் மகாராஜா (வயது 32). இருவரும் வியாபாரிகள். இவர்கள் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தற்காலிக தினசரி சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளனர். இருவரும் நேற்று முன்தினம் கடையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்த ராமையா மகன் வேலுச்சாமி உள்பட 6 பேர் உடைந்த தக்காளி வேண்டுமென கேட்டுள்ளனர்.

தாக்குதல்

அதற்கு மகாராஜா சிறிது நேரம் கழித்து வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார். உடனடியாக உடைந்த தக்காளி வேண்டும் என அவர்கள் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றியதில் வேலுச்சாமி உட்பட்ட 6 பேர் கடைக்குள் நுழைந்து மகாராஜாவையும், அவரது தந்தையையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

6 பேர் கைது

இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமி ( 46), வடக்கு திட்டங்குளம் நாகராஜ் ( 31), முத்தையா மகன் மாடசாமி ( 44), முத்துபாண்டி மகன் முருகன் (34), மாரியப்பன் மகன் வேல்சாமி ( 65), முத்துபாண்டி மகன் ராமர் (29) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.


Next Story