கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில்இடிமின்னுடன் பலத்த மழை


கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில்இடிமின்னுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் இடிமின்னுடன் பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர், தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் நேற்று அதிகாலையில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 62 மி.மீ. மழை பதிவானது.

பரவலாக மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. பெரும்பாலும் வீடுகளிலேயே மக்கள் முடங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் சாரல் மழையும், திருச்செந்தூர், கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழையும் பெய்தது.

குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

திருச்செந்தூரில் 62 மி.மீ. மழை

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் மழை நீடித்தது. ஆனால் நேற்று காலையில் சில மணி நேரங்களில் அதிக வெப்பம் காரணமாக மழை பெய்ததற்கான அறிகுறியே இல்லாதது போன்று மழைநீர் அனைத்தையும் நிலம் உள்வாங்கி விட்டது. இந்த மழையின் காரணமாக திருச்செந்தூரில் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கோவில்பட்டி

கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. பகலில் மட்டுமல்ல, இரவிலும் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

மேலும் பகல் நேரங்களில் வெளியே மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் வழக்கம் போல இருந்த நிலையில், மதியத்திற்கு மேல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணியளவில் லேசான சாரலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோன்று நாலாட்டின் புதூர், சாலைப்புதூர், இனாம்மணியாச்சி, திட்டங்குளம், பாண்டவர் மங்கலம், இலுப்பையூரணி, மூப்பன்பட்டி பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

வெப்பத்தினால் அவதிக்குள்ளாகி வந்த இப்பகுதி மக்கள் இந்த மழையினால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


Next Story