திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணஜெயந்தி
முசிறி திருச்சி ரோட்டில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், வெண்ணை மற்றும் வாசனை திரவிய, பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
துறையூர்
துறையூர் அருகே கொல்லப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹரே ராம ஹரே கிருஷ்ணா கோவிலில் கிருஷ்ணர் மற்றும் ராதைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ராதை, கிருஷ்ணன் வேடம் அணிந்த குழந்தைகள் உரலை இழுத்து பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படை
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ெரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வளாகத்தில் உள்ள கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. ஏற்பாடுகளை பாதுகாப்பு அதிகாரி அஜய் ஜோதி சர்மா தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர். தென்னக ரெயில்வே துணை பொது மேலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமயபுரம்
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எதுமலையில் ரெட்டி நல சங்கத்தின் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருச்சி பீமநகரில் உள்ள உள்ள வேணுகோபால கிருஷ்ணர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு வீடுகளிலும் கிருஷ்ணர் படங்கள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.