கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
பட்டணம்காத்தான் கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்றும், நாளையும் நடக்கிறது.
பனைக்குளம்,
பட்டணம்காத்தான் கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்றும், நாளையும் நடக்கிறது.
கிருஷ்ண ஜெயந்தி
மண்டபம் யூனியன், பட்டணம்காத்தான் கிராமத்தில் உள்ள கண்ணன் கோவிலில் 27-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 1-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காலை 7 மணி அளவில் பால்குடம் ஊர்வலம் நடைபெறுகிறது. அப்போது நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பட்டணம்காத்தான் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கண்ணன் கோவிலை வந்தடைவர்.
அதனை தொடர்ந்து பாமா, ருக்மணி சமேத கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பின்னர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், அன்னதானம், வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு கண்ணபிரானுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
விழாவுக்கு முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்குகிறார். மாவட்ட கவுன்சிலர் வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி, யாதவர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன் வரவேற்று பேசுகிறார்.
உறியடி திருவிழா
நாளை (வியாழக்கிழமை) உறியடி திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி காலை 7 மணிக்கு பொங்கல் வைபவமும், காலை 10 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு கண்ணபிரான் அழைப்பு, மாலை 3 மணிக்கு உறியடி உற்சவம் நடைபெறுகிறது. இதில் யுவராஜ் உறியடிக்கிறார். உறியின் கயிறை ஒன்றிய கவுன்சிலர் முருகன் இழுக்கிறார். தேரோட்டியாக கே.பி. டிராக்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் செயல்படுகிறார். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கண்ணபிரான் வீதி உலா மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் விஜயராகவன் மேற்கொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகிறார்.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், யாதவர் சங்க தலைவர் வடமலையான், செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெகதீஸ், துணை தலைவர் முருகேசன், துணை செயலாளர் விஜயகுமார், யாதவர் இளைஞர் சங்க நிர்வாகிகள், ஸ்ரீ கிருஷ்ணா மகளிர் சேவை குழுவினர், கோவில் உதவியாளர் முத்துராமன் மற்றும் பட்டணம்காத்தான் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.