பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா


பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:45 PM GMT)

விழுப்புரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் உறியடித்து உற்சாகமடைந்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, மாலையில் கிருஷ்ணர் அவதாரம் கொண்டு ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதில் விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம், கட்டபொம்மன் நகர், பாலாஜி நகர், ராஜகோபால் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் பஜனை பாடல்களுக்கு இடையே வெண்ணெய், தயிர், பால், மஞ்சள் உள்ளிட்டவைகளை கொண்ட பானைகள், உறியில் கட்டப்பட்டது. அவற்றை பக்தர்கள், உறியடித்து உற்சாகமடைந்தனர்.


Next Story