ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா: கண்களை கட்டிக்கொண்டு அண்ணாமலை உறியடித்தார்


ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா: கண்களை கட்டிக்கொண்டு அண்ணாமலை உறியடித்தார்
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கண்களை கட்டிக்கொண்டு உறியடித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, "என் மண், என் மக்கள்" 2-ம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார். நேற்று அவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டசபை தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் அருகே மாலை 4 மணிக்கு கட்சியினருடன் நடைபயணத்தை தொடங்கினார். அங்கிருந்து தெற்கு ரத வீதி, தேரடி, பஸ் நிலையம், சின்னக்கடை பஜார் ஆகிய பகுதிகள் வழியாக நடந்து வந்தார். வழிநெடுகிலும் அண்ணாமலைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

உறியடித்தார்

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ராட்டையில் அண்ணாமலை நூல் நூற்றார். ஆண்டாள் கோவில் அருகில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் துண்டால் கண்களை கட்டிக்கொண்டு உற்சாகமாக உறி அடித்தார்.

பின்னர் நடைபயணத்தை தொடர்ந்த அவர், ராமகிருஷ்ணபுரத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அது நிச்சயம் நடக்கும். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா மிகவும் மாறி இருக்கிறது. வளர்ச்சி பாதையில் செல்கிறது. உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். உலகில் மிக வலிமையான நாடாக இந்தியா மாறி வருகிறது.

சனாதனம்

தமிழகத்தில் கடந்த 29 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் மது விற்பனை, அரிவாள் கலாசாரம், கஞ்சா விற்பனை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைதான் அதிகரித்துள்ளது.

ஒரு குடும்பத்திற்காக தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் கனிம வளங்கள் மிகப்பெரிய அளவில் கொள்ளை போய் இருக்கிறது.

சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என தி.மு.க. பேசி வருகிறது. முதலும், முடிவும் இல்லாதது சனாதன தர்மம். மதங்கள் தோன்றுவதற்கு முன்னரே சனாதன தர்மம் இருந்திருக்கிறது. கோவிலுக்கு சென்று சாமியை பார்ப்பவர்களுக்கு மட்டுமே சனாதன தர்மம் பற்றி தெரியும். உண்டியலை பார்க்க செல்பவர்களுக்கு அது குறித்து தெரியாது. சாதியை ஒழிக்க வேண்டும். இதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

குழப்பவாதி

உதயநிதி ஸ்டாலின் எந்த கடவுளையும் நம்பமாட்டார். அவர் ஒரு குழப்பவாதி. மத்திய அரசு இதுவரை 10 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு அளித்துள்ளது. மத்திய அரசு அளிக்கும் மானியங்கள் அனைத்தும் பயனாளிகளுக்கு நேரடியாக சென்று அடைய வேண்டும் என்ற நோக்கத்திலே ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் நடக்கிறது. இந்த ஆன்லைன் பணபரிமாற்றம் தி.மு.க.வுக்காக எடுக்கப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தலை மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். ஆனால் 1971-ல் ஒரே நாடு ஒரே தேர்தலை கருணாநிதி ஆதரித்தார்.

தமிழகத்தில் மதுக்கடைகளையும், வறுமையையும் ஒழிப்போம் என்று தி.மு.க. அறிவித்தால் இதனை ஒழிக்க பா.ஜ.க.வும், தி.மு.க.வுடன் கைகோர்க்க தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலுக்கு அண்ணாமலை வந்து தரிசனம் செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரையும் சந்தித்து பேசினார்.

தி.மு.க. தயாரா?

பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறும்போது, "வரும் தேர்தலில் தி.மு.க. சனாதன ஒழிப்பை முன்வைத்து சந்திக்க தயாரா? நாங்கள் சனாதனத்தை காப்போம் என்று நிற்கிறோம். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். 5 ஆண்டுகள் ஆட்சிக்கு வந்தால் முதலில் 3 ஆண்டுகள் சனாதன ஒழிப்பு குறித்து தி.மு.க.வினர் பேசுவார்கள்" என்று கூறினார்.


Next Story