கறம்பக்குடி, அரிமளத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்


கறம்பக்குடி, அரிமளத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
x

கறம்பக்குடி, அரிமளம் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகள் கண்ணன், ராதை வேடமிட்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை

கிருஷ்ண ஜெயந்தி விழா

இந்துக்களின் பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா முக்கியமானது ஆகும். ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும், ரிஷப லக்கனமும் வரும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சிவன் வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி எனவும், பெருமாளை வழிபடுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாகவும் கொண்டாடுகின்றனர்.

கறம்பக்குடி பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. வெட்டன் விடுதி, பொன்னன் விடுதி, மழையூர், துவார் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் விஷேச பூஜைகள் நடைபெற்றன.

வீடுகளில் பொதுமக்கள் கோலமிட்டு சிறுவயது கண்ணன் பாதங்களை வாசல்களில் வரைந்து வெண்ணெய், லட்டு, கொழுக்கட்டை படையல் செய்து வழிபட்டனர்.

கண்ணன், ராதை வேடமிட்டு நடனம்

கறம்பக்குடி அக்ரஹாரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகள், கண்ணன், ராதை வேடமிட்டு நடனமாடினர்.

கண்ணனின் சிறுவயது சேட்டைகள், வெண்ணெய் திருடியது, லீலைகள் போன்றவற்றை சிறுவர்-சிறுமிகள் நடனம் மூலம் நடித்து காட்டியதை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து கைத்தட்டி ரசித்தனர்.

இதேபோல் கறம்பக்குடி தென்னகர், பட்டமா விடுதி, ரெகுநாதபுரம், சிவ விடுதி உள்ளிட்ட பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது.

அரிமளம்

அரிமளம் நைனாராஜீ தண்டாயுதபாணி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறுவர்கள் ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு அசத்தினர்.


Next Story