கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா


கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

ராமநாதபுரம்

ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளான ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர நாளைதான் நாடு முழுவதும் கிருஷ்ணஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று பல்வேறு பெயர்களில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதன்படி நேற்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வீடுகளில் கிருஷ்ணருக்கு புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்கரித்து அவருக்கு பிடித்த உணவுகளை படைத்து கொண்டாடினர். ஏராளமான வீடுகளில் தெரு பகுதியில் இருந்து குழந்தையின் பாத சுவடுகளை அரிசி மாவினால் வீடுகளுக்கு கொண்டு வருவது போன்று வரைந்து வைத்து வழிபட்டனர். இதன்மூலம் கிருஷ்ண பரமாத்மா வீடுகளுக்குள் வருவதாக ஐதீகம். மேலும், சிறுகுழந்தைகளை கண்ணன், ராதை போன்று அலங்கரித்து போட்டிகள் வைத்து மகிழ்ந்தனர்.

இதுதவிர கிருஷ்ணன் கோவில்களில் பொங்கல் வைத்தும், திருவிளக்கு பூஜை, கிருஷ்ணரின் திருவிளையாடல்களை விளக்கும் வகையில் உறியடி திருவிழா நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அலங்காரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 247 கண்ணன் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உறியடி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சந்தன காப்பு அலங்காரம்

திருவாடானை தாலுகா புலியூர் கிராமத்தில் ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினமும் சுவாமி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனைகளும், ஆன்மிக சொற்பொழிவு நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி அம்மன் திருக்கல்யாணமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 21-ம் ஆண்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. சுவாமி, அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி அம்மன் திருவீதி உலாவும் உறியடி நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனையொட்டி அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை புலியூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் புலியூர் காடுவெட்டி கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story