கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா


கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x

கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

பெரம்பலூர்

சிறப்பு அலங்காரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பெரம்பலூரில் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இரவில் பெரம்பலூர் எடத்தெருவில் உள்ள ராஜகோபால சுவாமி பஜனை மடத்தில் சிறப்பு பூஜையும், சந்தான கிருஷ்ணர் தொட்டில் சேவையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்து கிருஷ்ணரை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று உறியடி நிகழ்ச்சி

மேலும் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்களை வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை பதித்தும், கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை அலங்கரித்தும் கொண்டாடினர்.

இன்று (சனிக்கிழமை) காலை மதனகோபாலசுவாமி கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்கள் அருள்பாலித்து பல்லக்கில் எடத்தெரு கிருஷ்ணர் கோவிலுக்கு வந்தடைவார். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நான்கு இடங்களில் உறியடி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து யாதவர் சங்கத்தினர் செய்துள்ளனர்.


Next Story