கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நிதி ஆதரவு தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்மே 15-ந் தேதி கடைசி நாள்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நிதி ஆதரவு தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்மே 15-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 29 April 2023 7:00 PM GMT (Updated: 29 April 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிதி ஆதரவு தொகை பெற தகுதியானவர்கள் மே மாதம் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நிதி ஆதரவு தொகை

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் மிஷன் வட்சாலயா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 18 வயது வரை உள்ளவர்களின் வளர்ச்சி, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு உதவும் வகையில் நிதி ஆதரவு தொகை மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2023-2024-ம் நிதியாண்டிற்கான விண்ணப்பங்களை மே மாதம் 15-ந் தேதி வரை அளிக்கலாம். இந்த திட்டத்தில் பயன்பெறுவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் (கிராமங்கள்) மற்றும் ரூ.96 ஆயிரம் (நகரங்கள்) என்பதற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் பெற்றோரில் இருவரை இழந்த குழந்தைகள், தந்தையை இழந்த குழந்தைகள், உயிர் அச்சுறுத்தல் நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகள், எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணத்தால் பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வருமான சான்றிதழ்

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு முகவரியிட்டு, கைப்பட எழுதிய விண்ணப்பத்துடன் குழந்தையின் புகைப்படம், படிப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் புகைப்படம், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை, இறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டம் குறித்த விவரங்களை பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் டி.ஆர்.டி.ஏ. வணிக வளாகம், மாவட்ட மைய நூலகம் எதிரில், கிருஷ்ணகிரி- 635 002 என்ற முகவரியில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story