கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
பயங்கர சத்தத்துடன் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு குடோன் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால் அருகில் உள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
பட்டாசு விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முழுமையான விசாரணைக்கு பின்பே பட்டாசு வெடிவிபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்குள்ளான பட்டாசு குடோன் முறையான அனுமதி பெற்றுதான் செயல்பட்டு வந்ததாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.