கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து - கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த 29-ந் தேதி பட்டாசு குடோனில் வெடிவிபத்து நடந்ததில் 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிவிபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் இன்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் பழையபேட்டையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
அப்போது சம்பவம் குறித்த தகவல்களை ஐ.ஜி. சுதாகர், மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டறிந்தார். மேலும், பட்டாசு குடோன் வெடித்து பலியானவர்களின் உடல் சிதறி கிடந்த அனைத்து இடங்களையும், சுமார் 250 மீட்டர் தொலைவு வரை சுற்றி பார்வயைிட்டும் ஐ.ஜி. ஆய்வு செய்தார். மேலும், விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.
இதேபோன்று சென்னையில் இருந்து தடயஅறிவியல் துறை இயக்குனர் விசாலாட்சி விஜயலட்சுமி, துணை இயக்குனர்கள் நளினி, சண்முகசுந்தரம் ஆகியோர் வெடிவிபத்து நடந்த கிருஷ்ணகிரிக்கு இன்று நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் வெடிவிபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதி முழுவதும் பார்வையிட்டு தொடர்ந்து 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.