கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்த மகனை ஆணவ படுகொலை செய்த தந்தை கைது


கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்த மகனை ஆணவ படுகொலை செய்த தந்தை கைது
x

காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை மகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க சென்ற பாட்டியும் உயிர் இழந்தார். மருமகள் கவலைக்கிடமாக உள்ளனர். 2 பேரை ஆணவக்கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை அருகே நடந்த இந்த ஆணவ கொலை பற்றிய விவரம் வருமாறு:

தையல் தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கதவணி ஊராட்சிக்கு உட்பட்ட காரப்பட்டு பக்கமுள்ளது அருணபதி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). தையல் தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு பவித்ரா, சுஜி என்ற 2 மகள்களும், சுபாஷ் (25) என்ற மகனும் உள்ளனர்.

இதில் பவித்ராவிற்கு திருமணம் ஆகி விட்டது. சுஜி கல்லூரி படித்து வருகிறார். சுபாஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தண்டபாணி திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடன் அவரது மனைவி சுந்தரியும், மகள் சுஜியும் உள்ளனர்.

காதல் திருமணம்

மகன் சுபாஷ் ஊத்தங்கரை அருகே அருணபதியில் தனது பாட்டி கண்ணம்மாள் (70) தங்கி இருந்தார். இந்த நிலையில் சுபாஷ் தனது பெற்றோரை பார்ப்பதற்காக அடிக்கடி திருப்பூருக்கு சென்று வந்தார். அந்த நேரம் அவருக்கும் அங்கு வேலை செய்து வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசுயா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் சுபாஷ், அனுசுயாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த 27.03.2023 அன்று திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு மனைவியை தனியாக தங்க வைத்து விட்டு சுபாஷ் தனது பாட்டி வீட்டிற்கு வந்தார்.

தந்தை ஆத்திரம்

தனது பாட்டியிடம் தான் திருமணம் செய்து கொண்ட விஷயத்தை கூறினார். வேறு சமுதாயத்தில் திருமணம் செய்து கொண்டு விட்டாயே. உனது தந்தைக்கு தெரிந்தால் என்ன செய்வார் என தெரியுமா? என அவரது பாட்டி கண்டித்தார். ஆனாலும் பேரன் என்பதால் இந்த விஷயத்தை தனது மகன் தண்டபாணியிடம் எப்படி சொல்வது என தெரியாமல் கண்ணம்மாள் தவித்து வந்தார்.

இந்த நிலையில், திருப்பூரில் தனக்கு வேலை இல்லாததால் அருணபதிக்கு வந்த தண்டபாணி தனது தாய் வீட்டில் இருந்தார். அப்போது அரசல், புரசலாக தனது மகன் வேறு சமுதாய பெண்ணை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து தனது தாயிடம் மகனை, மருமகளை அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

சரமாரி வெட்டிக் கொலை

இதன்படி கண்ணம்மாளும் தனது பேரன் சுபாஷிடம் மருமகளை அழைத்து கொண்டு வருமாறு கூறினார். இதையடுத்து சுபாஷ் நேற்று இரவு தனது மனைவி அனுசுயாவுடன் பாட்டி கண்ணம்மாளின் வீட்டிற்கு வந்தார்.

இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தண்டபாணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகன் சுபாசை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

சுபாசின் சத்தம் கேட்டு பதறி போய் எழுந்த பாட்டி கண்ணம்மாளை தடுக்க முயன்றார்.அதில் அவருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சுபாஷ், அவரது பாட்டி கண்ணம்மாள் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் ஆத்திரம் அடங்காத தண்டபாணி, அரிவாளால் மருமகள் அனுசுயாவையும் துரத்தி துரத்தி வெட்டினார்.

போலீசார் விசாரணை

இதில் அனுசுயா வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சாலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். 3 பேரையும் வெட்டிய தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த நிலையில் அனுசுயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் அனுசுயாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலாஅட்வின், ஊத்தங்கரை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சுபாஷ், பாட்டி கண்ணம்மாள் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இரட்டை ஆணவக்கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தண்டபாணியை தேடி வந்தனர்.

இந்நிலையில், இரட்டை ஆணவக்கொலை செய்த தண்டபாணியை போலீசார் கைது செய்தனர். காதல் திருமணம் செய்த மகன் சுபாஷ் அதற்கு ஆதரவு தெரிவித்த அவரது பாட்டி கண்ணம்மாளை வெட்டி ஆணவக்கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தண்டபாணியை அரூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.


Next Story