ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி பிரசாரம்


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி பிரசாரம்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கே.எஸ்.அழகிரி பிரசாரம் செய்தார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் ஓட்டு கேட்டு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக தலைமை தேர்தல் பணிமனையில் கட்சி செயல்வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்ததும் எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி தலைவர்களை அழைத்து, இது காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிற்கட்டும் என்று கூறினார். இதுதான் கூட்டணி லட்சணம், நட்புக்கு இலக்கணம்.

எதிர் அணியில் த.மா.கா. போட்டியிட்ட இந்த தொகுதியில், அ.தி.மு.க. அவர்களுக்கே அந்த தொகுதியை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் ஜி.கே.வாசனிடம் இருந்து அநியாயமாக இந்த தொகுதியை பிடுங்கி சிறுமையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

பேனா சின்னம்

உலகில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், அது ஆட்சிக்கு வரும்போது, அந்த கட்சி தலைவர்களின் தியாகம், பணி ஆகியவற்றை நினைவூட்டும் வகையில் நினைவுச்சின்னங்கள் அமைப்பது வழக்கம்.

அதுபோல் கருணாநிதியின் பேனா சிலையாக வைக்கப்படுகிறது. அதை கடலில் வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என்று கூறுவது அபத்தமானது.

பிரபாகரன்

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி இருக்கும் கருத்தை, வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோரே ஏற்கவில்லை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதில்

கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்தபோது, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் உடன் இருந்தார். அப்போது நிருபர்கள் பேனா சிலை குறித்த கேள்வியை கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

பேனா சிலை அமைப்பது குறித்து விமர்சிக்க அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை. அவர்களின் கட்சி தலைவர் ஜெயலலிதாவுக்கே ஒரு சிலை அமைக்க வக்கற்றவர்கள். அவருக்கு சிலை வைக்கிறோம் என்று வைத்த சிலையும் அது ஜெயலலிதாவின் சிலையா?. அவர் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணின் சிலையா? என்று கேட்கும் வகையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். மேலும் பிரபாகரன் குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர், மறைந்து போன ஒருவர் மீண்டும் திரும்பி வந்தால் நாங்களும் மகிழ்ச்சியாக வரவேற்கிறோம் என்றார்.


Next Story