கடல் உப்பு காற்றினால் குடைவரை சிற்பம் பாதிப்பு; மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபத்தில் சுத்தப்படுத்தும் பணி தொடக்கம்


கடல் உப்பு காற்றினால் குடைவரை சிற்பம் பாதிப்பு; மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபத்தில் சுத்தப்படுத்தும் பணி தொடக்கம்
x

கடல் உப்பு காற்றினால் மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபத்தில் உள்ள குடைவரை சிற்பம் பாதிப்படைந்துள்ளதால் மேலும் பாதிப்பை தடுக்க ரசாயன கலவை கலந்த தண்ணீரால் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

கிருஷ்ண மண்டபம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏராளமான குடைவரை சிற்பங்கள் உள்ளன. இதில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கிருஷ்ண மண்டபம் என அழைக்கப்படும் பாறை குடை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இந்த சிற்பம் பெரிய பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த குடைவரை சிற்ப வளாகத்தில் உள்ளே இருக்கும் பாறையில் கிருஷ்ணர் பசுவின் மடியில் பால்கறப்பது போன்றும், அவரது குறும்புத்தனம், லீலைகள் குறித்து சிற்பங்களாக செதுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கிருஷ்ண மண்டபத்தில் செலுத்தி வைக்கப்பட்டுள்ள சிற்பங்களை ரசித்து பார்ப்பது வழக்கம். இந்த நிலையில், மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசும்போது காற்றின் மூலம் உப்புத் துகள்கள், தூசிகள் கிருஷ்ண மண்டபம் முழுவதும் பரவி இக்குடைவரை சிற்ப வளாக பகுதியை பாதிப்படைய செய்கிறது.

சுத்தம் செய்யும் பணி

அதேபோல் காக்கை, குருவி, குரங்கு போன்றவற்றின் எச்சங்கள் மூலமாகவும் ஒருபுறம் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை கலந்த தண்ணீர் மூலம் சுத்தம் செய்து உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் வேதியியல் பிரிவு வல்லுநர்கள் தற்போது இப்பணியை தொடங்கி உள்ளனர். இப்பணியை மேற்கொள்ள வசதியாக சவுக்கு கம்புகளால் அர்ச்சுணன் தபசு குடைவரை சிற்ப வளாகத்தில் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஏறி இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சிற்பங்களில் படிந்துள்ள அசுத்தங்களை ரசாயன கலவை கலந்த தண்ணீரால் நுணுக்கமான முறையில் சுத்தம் செய்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று சிற்பங்களை பார்வையிட்டால் ரசாயன கலவை நீரால் சுத்தம் செய்யும் பணிகள் தடைபடும் என்பதால் இப்பணிகள் முடியும் வரை சுற்றுலா பயணிகள் கிருஷ்ண மண்டபத்தின் உள்ளே சென்று கண்டுகளிக்க தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

சுத்தம் செய்யும் பணிகள் முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் கிருஷ்ண மண்டபத்தை கண்டுகளிக்கலாம் என்றும், அதுவரை உள்ளே யாரும் குடைவரை சிற்பங்களை பார்வையிட வரவேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்து தொல்லியல் துறை சார்பில் இதன் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story