கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
வள்ளியூர்:
பராமரிப்பு பணி காரணமாக கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
பராமரிப்பு பணி
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் 2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
ஒரு மாதம்
2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்பும் பணி இன்னும் ஒரு மாத கால அளவு நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்போது 1-வது அணு உலை மூலம் மட்டும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.