கூடங்குளம் முதல் 2 அணு உலைகளில் இருந்து 87 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்உற்பத்தி-வளாக இயக்குனர் தகவல்


கூடங்குளம் முதல் 2 அணு உலைகளில் இருந்து 87 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்உற்பத்தி-வளாக இயக்குனர் தகவல்
x

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் 2 அணு உலைகளில் இருந்து இதுவரை 87 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வளாக இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் 2 அணு உலைகளில் இருந்து இதுவரை 87 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வளாக இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

சுதந்திர தினவிழா

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி வளாக இயக்குனர் சுரேஷ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் செட்டிகுளம் அணு விஜய் குடியிருப்பு நகரியத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் தேசியக்கொடி ஏற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

இந்தியாவிலேயே அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடியது கூடங்குளம் அணு உலையாகும். முதல் மற்றும் 2-வது அணு உலைகளின் மூலம் இதுவரையில் 87 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 2022- 2023 வருவாய் ஆண்டில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் மூலம் 14 ஆயிரத்து 226 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 82 சதவீதம் மின் உற்பத்தி நடந்துள்ளது. கூடங்குளம் முதல் அணு உலை ரியாக்டர் தொடர்ந்து 638 நாட்கள் இயங்கி மின் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பது வரலாற்று சாதனையாகும்.

இறுதி கட்டத்தை நெருங்குகிறது

கூடங்குளம் முதல் மற்றும் 2-வது அணுஉலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு, தொழில்சார் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு மேம்பாட்டில் மத்திய தரச்சான்று பெற்று பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது. 3 மற்றும் 4-வது அணுஉலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

5, 6-வது அணுஉலை அமைப்பதற்காக தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகளுக்கு மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5, 6-வது அணுஉலைகளின் அடித்தள கட்டமைப்பு பணி நிறைவு பெற்று மேல்மட்ட அடுக்கிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூடங்குளம் அணுஉலை சார்பாக சுற்றுச்சூழல் சமுக மேம்பாட்டிற்காக நடப்பாண்டு 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 19 கோடியே 74 லட்சம் ரூபாயில் கிராம மற்றும் ஊரக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ரஷ்ய கூட்டமைப்பு தலைவர் இவானிஷவ் இவான், நிலைய இயக்குனர் ஷவந்த், திட்ட இயக்குனர் சின்னவீரன், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டண்ட் மங்கா சவுத்ரி, மனித வள மேம்பாட்டு பொது மேலாளர் விஜயராணி மற்றும் இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story