கடன் உதவி வழங்கி இலக்கை அடைந்த வங்கிகளுக்கு பாராட்டு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் உதவி வழங்கி இலக்கை அடைந்த வங்கிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வழங்கப்படும் தொழில் முனைவோர் திட்டங்களில் வங்கி கடன் உதவிகளை வழங்கி இலக்குகளை முடித்த வங்கிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் உதவிகளை வழங்கிய மின்னல், ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி, மேல்விஷாரம் ஆகிய இந்தியன் வங்கி கிளைகளுக்கும், ஆற்காடு பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கும், அதன் மேலாளர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், அதேபோன்று ஆற்காடு, கலவை இந்தியன் வங்கிகளுக்கும், ராணிப்பேட்டை கனரா வங்கிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளையும், புதிய தொழில் முனைவோர் திட்டத்தில் வாலாஜா ஸ்டேட் வங்கிக்கும், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்துதல் தொழில் திட்டத்தில் நெமிலி, பூட்டுத்தாக்கு இந்தியன் வங்கி, விளாப்பாக்கம் கனரா வங்கிக்கும் நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், இந்தியன் வங்கி முன்னோடி மண்டல மேலாளர் பிரசன்னா குமார், முன்னாடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரகாம், கோபி, அமுதமணி, முருகானந்தம், சிவானந்தன், மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.