சர்வதேச தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெண் போலீசுக்கு பாராட்டு

சர்வதேச அளவிலான தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற குமரி மாவட்ட பெண் போலீசுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
நாகர்கோவில்:
சர்வதேச அளவிலான தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற குமரி மாவட்ட பெண் போலீசுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தங்கம் வென்ற பெண் போலீஸ்
நெதர்லாந்தில் சர்வதேச அளவில் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நடந்து வருகிறது. இந்த தடகள போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.
இதில் இந்திய அணியின் குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணரேகாவும் கலந்து கொண்டு விளையாடுகிறார். நேற்று முன்தினம் நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் கிருஷ்ணரேகா பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பல்வேறு இந்திய தலைவர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சூப்பிரண்டு பாராட்டு
இந்த நிலையில் நெதர்லாந்தில் உள்ள கிருஷ்ணரேகாவை செல்போனில் தொடர்பு கொண்ட குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
கிருஷ்ணரேகா ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார்.
இதேபோல இந்த ஆண்டு நடந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றார்.
-**






