கைப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த ஊர்க்காவல் படை பெண்ணுக்கு பாராட்டு


கைப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த ஊர்க்காவல் படை பெண்ணுக்கு பாராட்டு
x

கைப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த ஊர்க்காவல் படை பெண்ணுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி அனிதா(வயது 23). இவர் தீபாவளி பண்டிகைக்காக நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினருடன் ஜவுளி எடுக்க பெரம்பலூருக்கு வந்தார். காமராஜர் வளைவு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே சென்றபோது அனிதா தனது கைப்பையை தவறவிட்டார். அதில், மொத்தம் 2½ பவுன் எடையுள்ள 6 தங்க நாணயங்கள், ஒரு வெள்ளி சங்கிலி, ரூ.7 ஆயிரத்து 900 ஆகியவை இருந்தது. அவர் கைப்பையை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அந்தப்பகுதிக்கு ஊர்க்காவல் படையில் பணியாற்றும் அன்னமங்கலத்தை சேர்ந்த ஷர்மிளா சொந்த வேலை காரணமாக வந்தார். அப்போது கேட்பாரற்று கிடந்த அந்த கைப்பையை எடுத்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவலறிந்த அனிதா பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்றார். இதையடுத்து ஷர்மிளா தங்க நாணயம், வெள்ளி சங்கிலி, பணம் இருந்த கைப்பையை சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலையில் அனிதாவிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து ஷர்மிளாவை போலீசார் உள்ளிட்டோர் பாராட்டினர்.


Next Story