குளச்சல் மீனவர்கள் வேலை நிறுத்தம்


குளச்சல் மீனவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 6:45 PM GMT)

ஆலய வழிபாடு தடைகளை நீக்க வலியுறுத்தி குளச்சல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்,

ஆலய வழிபாடு தடைகளை நீக்க வலியுறுத்தி குளச்சல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.

மீனவர்கள் வேலை நிறுத்தம்

குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயம் 423 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் கோட்டார் மறை மாவட்டத்தால் உருவாக்கப்பட்ட அன்பியங்கள் இல்லை என்ற காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் தினசரி திருப்பலி, நினைவு திருப்பலி, முதல் திருவிருந்து, மந்திரிப்பு, தவக்காலத்தில் குருக்களால் நடத்தப்படும் சிலுவைப்பாதை ஆகியவை நடைபெறவில்லை.

மேலும் காணிக்கை அன்னை ஆலய பங்கு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 3 சிற்றாலயங்களும் பூட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவில்லை. இந்த தடைகளை நீக்கி ஆலய வழிபாடுகளை தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி குளச்சல் பங்கு மக்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழு சார்பில் நேற்று மாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காணிக்கை அன்னை ஆலய வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி மீனவர்கள் நேற்று காலையில் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு

இதற்கிடையே குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய பங்கு மக்கள் அறிவித்த ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தம் தொடர்பாக கோட்டார் பிஷப் ஹவுசில் நேற்று முன்தினம் இரவு வரை பேச்சு வார்த்தை நடந்தது. இதில் குளச்சல் பங்கு நிர்வாக குழுவினர் மற்றும் ஆதரவு ஆலய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால் நேற்று 2-வது நாளாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் மறை மாவட்ட குருகுல முதல்வர் ரூபஸ், மறை மாவட்ட முதன்மை பணியாளர் கிளாஸ்டன், மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் டங்ஸ்டன், குளச்சல் முதன்மை பணியாளர் கிளைட்டன் ஆகியோர் கலந்து கொண்டு சுமூக முடிவை ஏற்படுத்தினர். வழக்கம்போல் ஆலய வழிபாடு நடத்துவது என முடிவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story