குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றம்


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றம்
x
தினத்தந்தி 14 Sep 2022 4:30 PM GMT (Updated: 14 Sep 2022 4:31 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வரும் 26-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அக்டோபர் 5-ம்தேதி சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகிறார்கள். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. முதலாம் திருநாளான 26-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு திருக்காப்பு அணிவிக்கப்படும். இரவு 10மணிக்கு சிம்மவாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது. 27ம்தேதி கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலம், 28-ம்தேதி ரிசபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 29-ம்தேதி மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் அம்மன் திருவிதியுலாவும், 30-ம்தேதி காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணனர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், அக்டோபர் 1-ம் தேதி சிம்ம வாகனத்தில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் திருவிதியுலாவும், 2-ம்தேதி பூஞ்சப்பரத்தில் ஆனந்தநடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 3-ம்தேதி கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 4-ம்தேதி அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், நடக்கிறது.

திருவிழாவையொட்டி தினமும் இரவு 10மணிக்கு அம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது. மேலும் திருவிழா நாட்களில் காலை 6மணி முதல் நள்ளிரவு வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளும், மாலை வேளைகளில் சமயசொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

5-ம்தேதி காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 11மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசாசூரசம்காரம் நடக்கிறது. 6-ம்தேதி அதிகாலை 1மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்த பின் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகளும், அதிகாலை 2-மணிக்கு அம்மன் சிதம்பரேஷ்வரர் திருக்கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி சாந்தாபிஷேகஆராதனையும், அதிலை 3மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும், காலை 6மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதலும், மாலை 4மணிக்கு அம்மன் திருக்கோவில் வந்தடைகிறது.

மாலை 4.30 மணிக்கு காப்புகளைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கிறது. 7-ம்தேதி மதியம் 12மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகமும் நடக்கிறது. இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் சங்கர், இணைஆணையர் அன்புமணி, செயல்அலுவலர் இராமசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தசரா திருவிழாவையொட்டி விரதம் மேற்கொண்டு பல்வேறு வேடம் அணியும் பக்தர்கள் குழுக்களாகவும், தனித்தனியாகவும் காணிக்கை வசூல் செய்து கோவிலில் படைப்பர். மேலும் ஏராளமான தசரா குழுக்களில் சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் நிழச்சிகள் என ஆங்காங்கோ நடத்தி காணிக்கை வசூல் செய்வர். தசரா திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி நடந்த தசரா திருவிழாவில் இந்த ஆண்டு லட்சகணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story