"குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" - தமிழிசை சவுந்தரராஜன்


குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்
x

“குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தின் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருநெல்வேலி

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் ஆனித்திருவிழாவையொட்டி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சாமி தரிசனம்

பின்னர் சுவாமி வீதி உலா சென்று விட்டு வந்த பின்னர் கோவில் முன்பு உள்ள அனுப்புகை மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வருகிறது. பிரதமரின் வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது. உலக தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான் பக்தராக சென்று சாமி தரிசனம் செய்யும்போது கூட சில பிரச்சினைகள் இருந்தது. அரசும், தீட்சிதர்களும் அமர்ந்து பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும். நடராஜர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தின் மூலம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட்டபோது தூத்துக்குடிக்கு புல்லட் ரெயில் கொண்டு வருவேன் என அறிவித்தேன். அதனை பலரும் கேலி-கிண்டல் செய்தனர். தற்போது ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் இருந்தும் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து இந்தியாவில் 86 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

2025-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலருக்கு உயரும் என உலகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற நாடுகளை இந்தியா சார்ந்து இருந்த நிலை மாறி இந்தியாவை மற்ற நாடுகள் சார்ந்திருக்கும் நிலை உருவாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உடனிருந்தனர். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்ததையொட்டி அங்கு துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் தலைமையில் உதவி கமிஷனர்கள் சுப்பையா, ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், ரமேஷ் மோகன், சோபா ஜென்சி, சுப்புலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பார்வையிட்டார்.


Next Story