குளித்தலை பஸ் நிலைய மேம்பாட்டு பணி: ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம்


குளித்தலை பஸ் நிலைய மேம்பாட்டு பணி: ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம்
x

குளித்தலை பஸ் நிலைய மேம்பாட்டு பணிக்காக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர்

பஸ் நிலையம் மேம்பாட்டு பணி

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள பஸ் நிலையம் இப்பகுதியில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேராளகுந்தாளம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை அடிப்படையில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் பெற்று அதில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணிக்காக ரூ.74 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள், கட்டிடங்களை அகற்றும் பணி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது. 1.22 ஏக்கர் இடம் பஸ் நிலையம் செயல்பட பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது.

கட்டிடங்கள் இடிக்கும் பணி

நகராட்சி நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகள் மூலம் இந்த 1.22 ஏக்கர் இடத்தை அளவீடு செய்யும் பணி 4 முறையாக நடந்தது. இதையடுத்து பஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும் பொருட்டு அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த மாதம் முதல் 4 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி, நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், குளித்தலை போலீசார் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் பொங்கலின் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.

முழுமையாக இடிக்கப்படும்

இதையடுத்து சில கட்டிட உரிமையாளர்களுக்கு தாங்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இடத்தில் உள்ள கட்டிடத்தை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் கட்டிடம் இன்று (வியாழக்கிழமை) இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நகராட்சிக்கு வழங்கப்பட்ட 1..22 ஏக்கர் இடத்தை துல்லியமாக கண்டறிந்து அதில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story