குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனை என்று பெயர் பலகை வைக்ககோரி போராட்டம் நடத்த முடிவு
குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனை என்று பெயர் பலகை வைக்ககோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையை தமிழக அரசின் அரசானையின்படி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுத்திட வலியுறுத்தி இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குளித்தலை அரசு மருத்துவமனை முகப்பில் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை - குளித்தலை என்று பெயர் பலகை அமைக்க போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வுமான சின்னத்துரை பங்கேற்கிறார் என்றும், குளித்தலை பகுதி மக்களின் எதிர்கால நலனை முன்னிறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. மேலும் போராட்டம் தொடர்பான மற்றும் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் குறித்த போராட்ட அறிவிப்பு நோட்டீஸ் பகிரப்பட்டு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.