ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குள்ளஞ்சாவடி  போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
x

ரவுடியை ஜாமீனில் விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

ரவுடி

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகன் ஸ்ரீகாந்த் (வயது 40). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஶ்ரீகாந்த்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து உடற்தகுதி சான்றிதழ் வாங்குவதற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திாிக்கு அழைத்து வந்தார். அங்கு ஸ்ரீகாந்தை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உடற்தகுதி சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

பணம் கேட்டு மிரட்டல்

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், ஶ்ரீகாந்த்தை சிறையில் அடைக்காமல் சொந்த ஜாமீனில் விடுவித்தார். அதற்கு அவர் லஞ்சமாக ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்று ஸ்ரீகாந்த்திடம் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாததால், இருவரும் பேரம் பேசியுள்ளனர். இதில் கடைசியாக ஜாமீனில் விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் கூறியுள்ளார்.

ஆனால் ஸ்ரீகாந்த் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், பல்வேறு வழக்குகளில் கைதாகுமாறு தொடர்ந்து ஸ்ரீகாந்துக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாலும், அவரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்ததாலும், இது பற்றி அவர் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

கைது

அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் கூறிய அறிவுரைப்படி ஸ்ரீகாந்த் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நேற்று இரவு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தரை தொடர்பு கொண்ட போது அவர் அருகில் உள்ள குடியிருப்பில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற ஶ்ரீகாந்த் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார். இதை அங்கு மறைந்திருந்து கண்காணித்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

ரவுடியிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story