குளித்தலை நகராட்சி சாதாரண கூட்டம்
குளித்தலை நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.
குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் மற்றும் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு நகர் மன்றத்தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணேசன், ஆணையர் பொறுப்பு மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குளித்தலை நகராட்சி பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் முடியும் நிலையில் உள்ளது. பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் வழியில் குறுகலான மையப்பகுதியில் காந்தி சிலை இருப்பதால் பஸ்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. இதனால் காந்தி சிலையை அருகில் உள்ள வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது தொடர்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பேரில் குளித்தலை கோட்டாட்சியர் குறிப்பாணையில் இது தொடர்பாக நகர்மன்ற தீர்மானம் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காந்தி சிலையை அகற்றி பஸ் நிலையத்தில் உள்ள அல்லது சுங்க கேட் பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு அமைந்துள்ள இடத்திலோ அல்லது வேறு மாற்று இடத்திலோ மாற்றி அமைக்கவும் காந்தி சிலையை சுற்றியுள்ள சுற்றுசுவருக்கு வெளியே போக்குவரத்திற்கும் மற்றும் வாகன பார்வைக்கு மறைக்கும்படியாக நிறுவப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பங்கள் மற்றும் இதர சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற நகர் மன்ற உறுப்பினர்களின் அனுமதி பெறுவது குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கவுன்சிலர்கள் குளித்தலையில் முக்கிய அடையாளமாக உள்ள காந்தி சிலையை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும்படியான இடத்தில் உரிய ஆலோசனை செய்து வைக்க வேண்டுமென தங்களது கருத்தை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா இது தொடர்பாக முறையாக ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்றார். இதையடுத்து குளித்தலை நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் 41 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்து நகர் மன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். மேலும் தங்களுடைய வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனர்.