குமரி மாவட்டத்தில்'கேக்' விற்பனை படுஜோர்


குமரி மாவட்டத்தில்கேக் விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 30 Dec 2022 6:45 PM GMT (Updated: 30 Dec 2022 6:46 PM GMT)

புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் ‘கேக்' விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் 'கேக்' விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்

உலகம் முழுவதும் புத்தாண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 2023-ம் வருட பிறப்பை கொண்டாடும் வகையில் தேவாலயங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களிலும் 'கேக்' வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி தங்களது மகிழ்வை வெளிப்படுத்துவர். எனவே புத்தாண்டு பண்டிகையில் 'கேக்' முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான 'கேக்' வகைகளை தயார் செய்யும் பணிகளில் பேக்கரிகள் ஈடுபட்டு வருகின்றன.

கேக்குகள் தயார்

குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் உள்ளன. ஒவ்வொரு பேக்கரிகளிலும் வித விதமான கேக்குகள் விற்பனைக்காக வந்துள்ளன. அதிலும் பிரபல பேக்கரிகளில் பல்வேறு வடிவிலான கேக்குகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அதிலும் 2023 என்ற எண்ணில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் வாடிக்கையாளர்களின் கண்களை கவரும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏராளமான பிளம் கேக், வைட் பாரஸ்ட், பிளாக் பாரஸ்ட் உள்பட பல்வேறு விதமான கேக்குகளும் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு இருக்கிறது. அதிலும் கிரீம் மற்றும் பிளம் கேக்குகளை உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் பரிசாக அளிப்பது வழக்கம். எனவே சாதாரண கேக்குகளை காட்டிலும் கிரீம் மற்றும் பிளம் கேக்குகள் அதிகளவு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

விற்பனை படுஜோர்

நாகர்கோவில் பகுதியில் உள்ள பேக்கரிகளில் புத்தாண்டிற்கான கேக் வகைகள் பல வண்ணங்களில் தயாராகி விற்பனைக்கு வந்துள்ளது. பிளம் கேக், வெண்ணிலா கேக், ஜெல் கேக், 7 கலர் கொண்ட ரெயின் கேக், சாக்கோ டிரபில் கேக், மிரர் கேக், பட்டர் ஸ்காட் சாக்லெட் கேக் என பல்வேறு வகையிலான கேக்குகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறாா்கள்.

இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் கேக் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

விதவிதமான கேக்குகள்

இதுபற்றி கேக் உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, "புத்தாண்டையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வித விதமான கேக்குகள் தயார் செய்யப்படுவது வழக்கம். அதிலும் பிளம் கேக் அதிகளவில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ பிளம் கேக் 950 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். இதுபோக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரத்துக்கும் கேக்குகள் உள்ளன. தற்போது கேக் விற்பனை மும்முரம் ஆகி உள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் கேக்குகளை வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் இருக்கும் தங்களது உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்கிறார்கள்" என்றனர்.


Next Story