குமரி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா - இன்று தொடங்குகிறது


குமரி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா - இன்று தொடங்குகிறது
x

ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குமரி,

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா திங்கட்கிழமை(இன்று) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.45 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு, சாமி வாகனத்தில் பவனி வருதல், கதகளி, தேவார பஜனை, திருவாதிரைக்களி, ராமாயண பாராயணம் போன்றவை நடைபெறும். வருகிற 31-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருவிழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஆராட்டு ஊர்வலம் கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக நடைபெறும். ஆராட்டு விழா முடிந்த பின்பு கோவிலுக்கு சாமி திரும்புதல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.


Next Story