மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

பொம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மாகாளியம்மன் கோவில்

திருப்பூர் நெருப்பெரிச்சல் கிராமம் பொம்மநாயக்கன் பாளையத்தில் 400 ஆண்டுகள் பழமையும், மிகவும் பிரசித்தியும் பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைத்து, திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதன்படி திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழா கடந்த 16-ந்தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது. இதையடுத்து தினமும் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

மேலும் விழாவையொட்டி நடைபெற்ற திருப்பூர் அழகு வள்ளி கும்மியாட்ட குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி, கொங்கு பண்பாட்டு மையத்தின் ஈசன் சலங்கை குழுவினரின் பெருஞ்சலங்கையாட்டம் உள்ளிட்ட தமிழ் பாரம்பரிய நிகழ்ச்சிகளை சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களும், பக்தர்களும் கண்டு ரசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேக விழா நேற்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு திருக்கலச புறப்பாடு நிகழ்ச்சியும், 10.15 மணிக்கு சகல கோபுர கலசங்களிலும், 10.45 மணிக்குள் சகல பரிவார சகித மாகாளியம்மனுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா செந்தில்நாத சிவாச்சாரியார், ஜெயந்திரசிவம் ஆகியோர் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினர் மற்றும் பொம்மநாயக்கன்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு குடிநீர், வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அனுப்பர்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் மண்டல பூஜை நடைபெற உள்ளது.



Related Tags :
Next Story