சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்


சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் உள்ள சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை

சிங்கம்புணரி,மே,27 -

சிங்கம்புணரியில் உள்ள சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேவகப்பெருமாள் கோவில்

சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. சிங்கம்புணரி வட்டார பகுதியில் உள்ள 100 கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த கோவில் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. திருப்பணி குழு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம அருணகிரி தலைமையில் கோவில் அருகில் யாகசாலை அமைப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

யாக சாலை அமைக்கும் பணி தீவிரம்

வருகிற 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். விழாவிற்கு சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

தற்போது பிரமாண்டமாக யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வருகின்ற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி முதல் யாகசாலையில் சிறப்பு வேள்வி நிகழ்ச்சிகள் தொடங்கி முதல் கால பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்குகிறது. பின்னர் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்ற 1-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ராம.அருணகிரி, தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம் திருப்பணி குழு கமிட்டியினர் மற்றும் அடைக்கலம் காத்த நாட்டார்கள் பரம்பரை ஸ்தானீகம் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.


Next Story