துடியலூரில் அரவான் கோவில் கும்பாபிஷேகம்
துடியலூரில் அரவான் கோவில் கும்பாபிஷேகம்
துடியலூர்
துடியலூரில் அரவான் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அரவான் கோவில்
கோவையை அடுத்த துடியலூரில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ அரவான் கோவில் அமைந்துள்ளது. அரவான் கோவில் திருவிழாவானது குருடி மலை அடிவாரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், வரப்பாளையம், தாழியூர், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை, பழனிகவுண்டர்புதூர், அப்பநாய்க்கன்பாளையம், வடமதுரை, வெள்ளகிணர், சுப்பிரமணியம் பாளையம், காசிநஞ்சகவுண்டன்புதூர், ராக்கிபாளையம், வெற்றிலை காளிபாளையம், தொப்பம்பட்டி மற்றும் துடியலூர் என 16 கிராம மக்கள் பங்கேற்கும் விழாவாக 18 நாட்கள் நடைபெறும். அவ்வளவு பெருமை வாய்ந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம்
இந்த நிலையில் இந்த கோவிலில் கடந்த 1-ம் தேதி முளைப்பாரி தீர்த்த குடங்களுடன் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அம்மன் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2-வது நாளில் முதல் கால வேள்வி பூஜை தொடங்கியது. நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் இரண்டாம் கால வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. அதனை அடுத்து யாகசாலை மண்டபத்தில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு திருக்கோவில வலம் வந்தது. அதனை அடுத்து கோவிலின் கோபுர கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.