ஹரிஹரபுத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ஹரிஹரபுத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கல்லக்குடி:
கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புஞ்சைசங்கேந்தி கிராமத்தில் பூரணபுஷ்கலா சமேத ஹரிஹர புத்திர சுவாமி(அய்யனார்), தைலாயி, லெட்சுமாயி சமேத துரைசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் உள்ளது. பழமை மிக்க இந்த கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக கடந்த 29-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் அனுஞ்கை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவையும், மாலையில் ரக்ஷாபந்தனம், வாஸ்துசாஸ்தி உள்ளிட்டவையும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு மேல் பல்வேறு பூஜைகளும், அதைத்தொடர்ந்து முதல் கால யாக பூஜையும், மாலை 5.30 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜையும், 31-ந் தேதி மாலை 5.30 மணியளவில் மூன்றாம் கால யாகபூஜையும், நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தீபாராதனையுடன் கடம் புறப்பாடு செய்யப்பட்டு பரிவார தெய்வங்களின் விமான கலசத்திற்கும், அதைத்தொடர்ந்து பூரண புஷ்கலா சமேத ஹரிஹரபுத்திர சாமி, தைலாயி, லெட்சுமாயி சமேத துரைசாமி சுவாமி கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர விமான கலசங்களுக்கும், பின்னர் மூலவருக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
பின்னர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா நெய்வேத்தியம், தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை டாக்டர் சிவஸ்ரீ பிச்சை சிவாச்சாரியார், சிவஸ்ரீ மதுசூதன சிவாச்சாரியார் மற்றும் சிவகாமரத்தினம் சிவஸ்ரீ ஜெயக்குமார் சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர். முன்னதாக விழாவையொட்டி யானை, குதிரைகள் வரவழைக்கப்பட்டு கஜமோட்சம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் செண்பகம் செந்தில்குமார், துணைத் தலைவர் சுதா செந்தில்குமார், சங்கேந்தி ஆண்டவர் அறக்கட்டளை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சிராளன்தேவன், கணேஷ், முக்கிய பிரமுகர்கள், பெருவளை வாய்க்கால் பாசன வாய்க்கால் சங்க தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான தியாகராஜன், துரைசாமி, டிராவல்ஸ் குமார், ஆண்டாள்கேபிள் சுதாகர், சசிகுமார், பெயிண்டிங் காண்டிராக்டர் சுந்தர்ராஜ், ஊராட்சி செயலாளர் சத்தியநாதன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், சென்னை, மதுரை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், வந்தலைகூடலூர், காணக்கிளியநல்லூர், ரெட்டிமாங்குடி, புள்ளம்பாடி, குமுளூர், ந.சங்கேந்தி, இ.வெள்ளனூர், புதூர்உத்தமனூர், கல்லக்குடி உள்ளிட்ட சுமார் 25 கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.
பல்லக்குகளில் வீதி உலா
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், சங்கேந்தி ஆண்டவர் அறக்கட்டளை நிர்வாகிகள், இளைஞர்கள், கிராம மற்றும் உள்ளூர், வெளியூர் கோவில் குடிபாட்டு மக்கள் செய்திருந்தனர். முன்னதாக ஊராட்சி மன்றம் சார்பில் கிராமம் முழுவதும் தூய்மை காவலர்களை கொண்டு தூய்மைப் பணிகள் செய்தனர். கிராமத்தின் எல்லைகளில் பந்தல் அமைத்து நீர்மோர், அன்னதானம் வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து இரவில் தங்க பல்லக்கு மற்றும் முத்து பல்லக்குகளில் சாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெற்றது. கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.