சீர்காழியில் சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்
சீர்காழியில் சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்ரீ சட்டநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சட்டநாதருக்கு எதிரே அஷ்ட பைரவர்கள் சன்னதி அமைந்துள்ளது.
இதன் ஒரு பாகமாக வயிரவன் கோடி என்று அழைக்கப்படும் இடத்தில் பைரவர்களில் ஒருவரான சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் அமைந்துள்ளது.
இதனால் காசிக்கு இணையான பைரவர் ஷேத்திரமாக சீர்காழி விளங்கி வருகிறது. தடையின்றி நாள் தோறும் இந்த சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் வியாபாரம் பெருகி செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் காலையில் இந்த பைரவரை வணங்கி சென்று வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி பூர்வாங்க பூஜையும், 20- தேதி முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது.
இதனை தொடர்ந்து சரியாக காலை 7 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 7:15 மணிக்கு சுவாமிக்கு, அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.