வன்னி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ஆயக்குடி கிராமத்தில் வன்னி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள ஆயக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரண புஷ்காலம்பிகா சமேத வன்னி அய்யனாரப்பன் கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், பாலமுருகன், கருப்பண்ண சுவாமிகள் உள்ளன. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி கடந்த 30-ந் தேதி மாலை 5 மணியளவில் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. 31-ந் தேதி திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி, மகாபூர்ணாகுதியும், நேற்று காலை 7 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி, நாடி சந்தானம், யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.
இதையடுத்து வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க வன்னி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது. விழாவில் ஆயக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.