பிடாரி அரசிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கண்டரக்கோட்டை பிடாரி அரசிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் உள்ள சென்னை சாலை அருகில் பிரசித்தி பெற்ற பிடாரி அரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்ட யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம்புறப்பட்டு சென்று காலை 7.30 மணி அளவில் பிடாரி அரசிஅம்மன் கோவில் கருவறை கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள வேத அருள்புரீஸ்வரர் சன்னதி, வேத விநாயகர், செல்வவிநாயகர், முத்துமாரியம்மன், கண்ணபிரான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் கண்டரக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.