கருப்பராயன் சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
சூளேஸ்வரன்பட்டியில் உள்ள கருப்பராயன் சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடக்கிறது.
பொள்ளாச்சி,
சூளேஸ்வரன்பட்டியில் உள்ள கருப்பராயன் சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடக்கிறது.
கும்பாபிஷேக விழா
பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனியில் கருப்பராயன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 5-ந் தேதி கோவில் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டது. நேற்று முன்தினம் திருமூர்த்தி மலையில் இருந்து, பக்தர்கள் புடைசூழ கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜையும் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் கோட்டூர் ரோடு மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
யாகசாலை பூஜை
இதையடுத்து வாஸ்து சாந்தி, யாத்ரா ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதியும் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் விசேஷ சாந்தி, மூன்றாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் நடக்கிறது. கருப்பராயன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மகா அபிஷேக பூஜை, கோ பூஜை, உபச்சார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.