மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தாராபுரம்
தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில்
தாராபுரம் பழைய போலீஸ் நிலைய வீதியில் உள்ளது பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில். சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தாராபுரம் மட்டும் இன்றி அதனைச்சுற்றி 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள கிராம மக்களும் இந்த மாரியம்மனை வந்து வழிபட்டு செல்கின்றனர்.
வருடந்தோறும் பங்குனி மாதத்தில் இக்கோவிலில் திருவிழா நடைபெறும். அதில் பல்வேறு சமூகத்தினரின் கட்டளைபடி 15 நாட்கள் திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் பூவோடு எடுத்தல், அலகு குத்தி வருதல், காவடி எடுத்து வருதல், பறவை காவடி எடுத்து வருதல் என தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.
திருப்பணிகள்
இந்த திருவிழாவில் தாராபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மாரியம்மன் கோவிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர், மாாியம்மன் சேவா சங்கத்தினா் மற்றும் திருவிழா குழுவினர் இணைந்து திருப்பணி குழு அமைத்தனர். அவர்கள் கோவில் புனரமைப்பு திருப்பணிகளை மேற்கொண்டனா். அதன்படி கோவில் முன் மண்டபம் புதிதாக கட்டப்பட்டு, கோபுரம் சீரமைப்பு, வா்ணம் பூசுதல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று முடிவடைந்தன.
கும்பாபிஷேகம்
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் முதற்கால வேள்வியுடன் தொடங்கியது. 19-ந்தேதி 2-ம் கால வேள்வி நடைபெற்றது. 20-ந்தேதி முளைபாலிகை வழிபாடு, காப்பு கட்டுதல் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு கோவிலில் உள்ள விநாயகர், மாரியம்மன், கோபுர கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.